மாணவ மாணவியர்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்.
அய்யன் திருவள்ளுவர் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவோம். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு.
நாமக்கல் மாநகராட்சி, உழவர் சந்தை அருகிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினைக் கொண்டாடும் விதமாக, திருக்குறள் குறித்த ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். "அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை கடந்த 2000-ம் ஆண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியால், கன்னியாகுமரியில் நிறுவப்பட்டது. இச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வெள்ளி விழா வருகின்ற 30.12.2024 முதல் 01.01.2025 வரை 3 நாட்கள் கன்னியாகுமரியில் கொண்டாடப்படவுள்ளது. அதனடிப்படையில் டிசம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தல், திருக்குறள் விளக்க உரைகளையும், திருக்குறள் தொடர்பான புகைப்படங்களை பொது மக்கள் பார்வைக்கு வைத்து புகைப்பட கண்காட்சி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இன்றைய தினம் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் குறித்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களால் வரையப்பட்ட வண்ண ஓவியம் மற்றும் புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் திருக்குறள் தொடர்பான ஓவியங்கள், வண்ணப்புகைப்படங்கள், புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓவியக் கண்காட்சி அமைக்க உறுதுணையாகவும், மாவட்ட மைய நூலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை வரைந்ததற்காகவும் அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியர்கள் ஆ.மகேந்திரன், ந.சேகர், ரா.மதியழகன் மற்றும் ஜவஹர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள் கு.பிரவின், ரா.விஜயகுமார் மற்றும் மாணவர்கள் ரா.ஜீவா, அனுவிபாலட்சுமி ஆகியோரை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, 24.12.2024 அன்று வாசகர்கள் மற்றும் பொதுகம்களுக்கு பேச்சுப்போட்டிகள், 26.12.2024, 27.12.2024 மற்றும் 29.12.2024 ஆகிய 3 நாட்கள் திருக்குறள் கருத்தரங்கம், 28.12.2024 அன்று திருக்குறள் வினாடி வினா போட்டி, 30.12.2024 அன்று 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மேலும், 31.12.2024 அன்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், இன்று முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ள பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000/-, இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000/- ரொக்கப் பரிசும், போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் (பொ) ச.தேன்மொழி, மாவட்ட மைய நூலக தலைவர் மா.தில்லை சிவக்குமார், முதல் நிலை நூலகர் ரா.சக்திவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.