சேலம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி
பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்
சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 3-வது வார்டு சத்யா நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டரிடமும் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் நேற்று சத்யா நகரில் பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் பல ஆண்டுகளாக ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும், எனவே, சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர். சேலம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.