பா.ம.க., போஸ்டரால் உத்திரமேரூரில் பரபரப்பு
உத்திரமேரூர் பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று பயணியர் நிழற்கூரையில், 'இருக்கைகளை காணவில்லை' என, உத்திரமேரூர் முழுதும் ஒட்டப்பட்டுள்ள பா.ம.க., கட்சி போஸ்டரால், நேற்று பரபரப்பு;

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று பயணியர் நிழற்கூரையில், 'இருக்கைகளை காணவில்லை' என, உத்திரமேரூர் முழுதும் ஒட்டப்பட்டுள்ள பா.ம.க., கட்சி போஸ்டரால், நேற்று பரபரப்பு நிலவியது. இந்த போஸ்டரில் உள்ளதாவது: உத்திரமேரூரில், 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் வெளியே, எதிரே மற்றும் அம்பேத்கர் சிலை எதிரே, பயணியர் நிழற்கூரை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இருக்கைகளை காணவில்லை. கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட்ட மூன்று நிழற்கூரையில், பயணியரின் வசதிக்காக இருக்கைகள் அமைக்க, மாவட்ட குறைதீர் கூட்டத்தில் மனு பெறப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன், பேரூராட்சி பொது நிதியிலிருந்து இரு இருக்கைகள் அமைக்கப்பட்டது. மேலும், மீதமுள்ள இருக்கைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.