புதுப்பாக்கத்தில் கல்லை கட்டி குளத்தில் வீசப்பட்ட உடல் மீட்பு
காஞ்சிபுரத்தில் குளத்தில் வீசப்பட்ட உடலை மீட்டு போலீசார் விசாரணை;

காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிச்சத்திரம் அருகே புதுப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள பொது குளத்தில், சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை, கிராமவாசிகள் நேற்று பார்த்துள்ளனர். பாலுசெட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் - பொறுப்பு, துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின், குளத்தில் மிதந்த சடலத்தை போலீசார் மீட்டனர். தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன், இடுப்பில் கல் ஒன்று கட்டப்பட்டு தண்ணீரில் சடலம் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. இறந்த நபருக்கு, 35 வயது இருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த நபர் யார், கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.