ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நெடுஞ்சாலை துறை அதிரடி

அன்னை இந்திரா காந்தி சாலையோரம், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகள், அகற்றினர்;

Update: 2024-12-23 11:30 GMT
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நெடுஞ்சாலை துறை அதிரடி
  • whatsapp icon
காஞ்சிபுரத்தில் நான்கு ராஜ வீதிகளில் ஒன்றான, நெல்லுக்காரத்தெரு என அழைக்கப்படும் அன்னை இந்திரா காந்தி சாலையில், சித்ரகுப்தர் கோவில், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கி, சினிமா தியேட்டர், தனியார் மருத்துவமனை, உணவகம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. பேருந்து நிலையம் ஒட்டி இச்சாலை அமைந்துள்ளதால், எப்போதும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இருக்கும். இச்சாலையோரம் நடைபாதை கடைகள், கட்டுமான பணிக்கான ஜல்லி, செங்கல், மணல் உள்ளிட்ட பொருட்கள் குவிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தாமல், சாலையின் மையப்பகுதி வரை நிறுத்தி வந்தனர். இதனால், போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே, அன்னை இந்திரா காந்தி சாலையில், சாலையோரம் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறையினர், அன்னை இந்திரா காந்தி சாலையோரம், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகள், கட்டுமான பொருட்களை அகற்றினர். அதேபோல, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News