இந்தியாவின் மதச்சார்பின்மையை பாதுகாக்க கிறிஸ்துமஸ் நாளில் உறுதியேற்போம்: வைகோ

வெறுப்பவர்களையும் நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் அமுதமொழியை மனதில் கொண்டு இந்தியாவின் மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க கிறிஸ்துமஸ் நாளில் உறுதியேற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-24 17:26 GMT
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வருமாறு, மனிதகுல வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் வெளிச்சமாகவும், மனிதநேயத்தின் மாண்பை உரைக்கும் மாமருந்தாகவும் உபதேச மொழிகளை வழங்கிய ரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள். மாபெரும் புரட்சியாளரான கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ தன் வாழ்க்கையில் தன்னை மிகவும் கவர்ந்த வாசகங்கள் இயேசுவின் மலைப்பிரசங்கம்தான் என்றார். தலையில் முள்முடி சூட்டப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி, கபாலஸ்தலம் எனப்படும் கொல்கதாவில், கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டதனால் அவர் சிந்திய ரத்தம், மனிதகுலத்துக்காக சிந்திய ரத்தமாகும். துயரப்படுகிறவர்களுக்காக, சாந்தகுணம் உள்ளவர்களுக்காக, நீதியின்மேல் பசி-தாகம் உள்ளவர்களுக்காக, இரக்கம் உள்ளவர்களுக்காக, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களுக்காக, சமாதானம் பண்ணுகிறவர்களுக்காக, நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்காக உன்னதமான ஆறுதல் மொழிகளை இயேசு பெருமான் சொன்னார்.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்காகவும், தமிழ்மொழியின் மேன்மைக்காவும், ஏழை எளியோரின் பிணியைப் போக்குவதற்காகவும், பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியைத் தருவதற்காகவும் ஆற்றியிருக்கின்ற அருந்தொண்டு வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்புதான் ஜனநாயகத்தின் அடித்தளத்தைப் பாதுகாக்கும் அரணாகும். சமய நல்லிணக்கம்தான் இன்றைய காலகட்டத்தில் இந்திய நாட்டின் இன்றியமையாத தேவையாகும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயல்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. வெறுப்பவர்களையும் நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் அமுதமொழியை மனதில் கொண்டு இந்தியாவின் மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் கிறிஸ்துமஸ் திருநாளில் உறுதி மேற்கொள்வோம். அன்பையும் பரிவையும் கனிவையும் நேசத்தோடு சக மனிதர்களிடம் பிரதிபலிக்கும் உணர்வுடன் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கிறிஸ்துமாஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Similar News

மின்தடை