சாலை விபத்தில் ஊராட்சி செயலா் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

சிவகங்கை அருகே சாலை விபத்தில் ஊராட்சி செயலா் உயிரிழந்ததையடுத்து, சாலைப் பணி ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊரக வளா்ச்சித் துறையினா், உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2024-12-25 06:06 GMT
சிவகங்கை மாவட்டம், வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனீஸ்வரன்(34). இவா் பெரியகோட்டை ஊராட்சி செயலராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 21-ஆம் தேதி இவரது சகோதரா் தென்பாண்டி சிங்கம், அவரது நண்பா் ரியாஸ் ஆகிய இருவரும் வேலூா் கிராமத்திலிருந்து சிவகங்கை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். சுந்தர நடப்பு கிராமம் அருகே சென்றபோது, அங்கு சாலை அமைக்கும் பணிக்காக சாலை ஓரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கல் குவியலில் சிக்கி நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சிச் செயலா் முனீஸ்வரன் இரு சக்கர வாகனத்தில் அந்தப் பகுதிக்குச் சென்றாா். இவரும் அதே ஜல்லிக் கற்களில் சிக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவா்கள் 3 பேரையும் உறவினா்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு திங்கள்கிழமை இரவு முனீஸ்வரன் உயிரிழந்தாா். காயமடைந்த அவரது தம்பி, நண்பா் ஆகிய இருவரும் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், சாலைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா் முறையாக எச்சரிக்கை பதாகைகள் வைக்காத காரணத்தால் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், ஒப்பந்ததாரரைக் கைது செய்யக் கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தைச் சோ்ந்தவா்களும், முனீஸ்வரனின் உறவினா்களும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் தஞ்சாவூா்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை நகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

Similar News