பாமக, விசிக போல் கொள்கை சமரசம் செய்ய விரும்பாததால் தனித்தே போட்டியிடுகிறோம் - சீமான்

பாமக, விசிக போல் கூட்டணியில் கொள்கை சமரசம் செய்ய வேண்டும் என்பதால், தோற்றாலும் பரவாயில்லை என கூட்டணியின்றி தனித்தே போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-25 18:05 GMT
சென்னையில் நடைபெற்ற வேலுநாச்சியார் நினைவு நாள் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர், ''நம்மாழ்வாரின் கனவு என்பது அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வில்லாத தேர்ச்சி. 8-ம் வகுப்பு முடிக்கும் முன்பே மாணவர்கள் பின் தங்கிவிட்டால், அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிடும். கல்வி என்பது சுகமானதாக இருக்க வேண்டும். சுமையாக இருக்கக்கூடாது. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்கள் உலக சாதனைகளை படைத்திருக்கின்றனர். அவர்கள் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் என்ன? அறிவை வளர்க்கும் ஒரு கருவி தான் கல்வியே தவிர மனித அறிவுக்கும் மதிப்பெண்களுக்கும் சம்பந்தமில்லை. ஒரு கொள்கையை முன்வைத்துத் தான் கட்சியை ஆரம்பிக்கிறோம். அதேநேரம் எந்தெந்த கட்சிகளின் கொள்கைகளில் இருந்து மாற்றாக கட்சியை ஆரம்பித்து இருக்கிறோம் என்பதும் முக்கியம். சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி போன்றவை தான் பாமகவின் கொள்கை. அதை முன்னெடுப்பவருடன் தான் கூட்டணி என பாமக அறிவித்திருந்தால் அது அவர்களுக்கு பயனளித்திருக்கும். இதேபோல் விசிக தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியதால் என்ன பயன்? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? எனது தொகுதிக்கு ஆட்சியாளர்கள் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டுகிறார் தவாக தலைவர் தி.வேல்முருகன். இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். இன்று தோற்றால் நாளை வெல்லலாம். அதற்கு கூட்டணிக்கு ஏன் போகவேண்டும்? அநீதி என்று தெரிந்தும் அதற்கு துணை நிற்ககூடாது. கட்சிக் கொள்கையை விட்டுவிட்டு கூட்டணி அமைப்பதால் கொள்கை சமரசம் செய்யவேண்டி உள்ளது. இதனால் தான் தோற்றாலும் பரவாயில்லை என தனித்தே போட்டியிடுகிறேன். மாற்று அரசியலை விரும்பும் மக்களுக்காக நான் இருப்பேன் என்று கூறினார்.

Similar News