குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அழகியநகர் பகுதியை சார்ந்த வீரசிங்கம் என்பவர் மகன் ராம்கி (26). இவர் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு செண்பகராமன்புதூரில் நூல் கம்பெனியில் பணிபுரிந்து வந்த போது அதே கம்பெனியில் பணிபுரிந்த ஆஷா (23) என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஆஷாவின் வீட்டில் இவர்களின் காதல் பற்றி விவரம் தெரிந்ததும், ஆஷாவை வெளியே அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்தனர். இந்த நிலையில் ராம்கியும் ஆஷாவும் வீட்டை விட்டு நேற்று முன்தினம் 24 ஆம் தேதி வெளியேறி குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே ஆஷாவின் பெற்றோர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஆஷாவை காணவில்லை என புகார் கொடுத்திருந்த நிலையில் தகவல் அறிந்ததும் திருமணமான காதல் ஜோடிகள் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு நேற்று (25-ம் தேதி) வந்தனர். ஆஷா ராம்கி உடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த காரணத்தினால் ஆஷாவை போலீசார் ராம்கியுடன் அனுப்பி வைத்தனர்.