விருத்தாசலம் அருகே கோ. பொன்னேரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்தது
விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம், எல்லைக்குட்பட்ட கோ. மாவிடந்தல் ஊராட்சி கோ.பொன்னேரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பானுமதி, ஜெயராஜ், நகரக் குழு பீர்முகமது, ராஜசேகர், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கோகுலகிறிஸ்டிபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கோ.பொன்னேரி பைபாஸ் சாலை அருகே நீர்நிலை ஓடை புறம்போக்கு வழியை சில தனிநபர்கள் தடுத்து ஆக்கிரமித்து நிலமாக திருத்தியும், கட்டிடங்கள் கட்டியும் உள்ளனர். மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் உத்தரவை மதிக்காமல் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்து வருகின்றனர். மழைக்காலங்களில் அவ்வழியாக செல்லக்கூடிய மழை வெள்ளம் கார்குடல் ஏரிக்கும் மணிமுத்தா ஆற்றுக்கும் செல்லும் வழியாக இருந்து வந்த நிலையில் இப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால் மழை வெள்ளம் செல்லாமல் தங்கி நிற்கிறது. எனவே இந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும். என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.