சுனாமியில் தரங்கம்பாடியில் 315 பேர் உயிரிழந்த நினைவு தினம் அனுசரிப்பு

சுனாமி ஆழிபேரலையால் உயிரிழந்தோரின் 20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - தரங்கம்பாடி கடற்கரையில் குடும்பத்தினர் தர்பணம் கொடுத்து வழிபாடு செய்து பேரணியாக சென்று கண்ணீருடன் நினைவஞ்சலி

Update: 2024-12-26 05:07 GMT
:- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பலியாயினர். இதில் தரங்கம்பாடியில் மட்டும் 315 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் மீன் விற்பனை கூடத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் யாகம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர். தொடர்ந்து கிராம மக்கள் கருப்பு பேச் அணிந்து 1000 க்கும்‌ மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார், பின்னர் தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று மாலை அணிவித்து மலர்வளையம் வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்‌. இதில் மயிலாடுதுறை எம்பி சுதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் பலரும் கலந்துகொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதுபோல மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சந்திரபாடி, சின்னூர்பேட்டை, சின்னங்குடி, குட்டியாண்டியூர், வெள்ளகோயில், மாணிக்கபங்கு, வானகிரி, உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News