2004ஆம் ஆண்டு டிச. 26ஆம் தேதி அதிகாலை தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோா் உயிரிழந்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். கொட்டில்பாடு பகுதியில் உயிரிழந்த 199 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். இந்நிலையில், சுனாமி எனும் இயற்கைப் பேரழிவின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் குமரி கடலோர கிராமங்களில் இன்று கடைபிடிக்கப்பட்டது. சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுனாமியால் உயிர் இழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளன நினைவு ஸ்தூபியில் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் உட்பட ஏராளமானவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.