உள்ளாட்சித் தேர்தலை  நடத்தாதபட்சத்தில் மன்ற தலைவர்களை சிறப்பு அதிகாரிகளாக்கு 

ஊரக உள்ளாட்சி  தேர்தலை நடத்த தாமதமாவதால்  ஊராட்சி மன்றத் தலைவரையே சிறப்பு அதிகாரியாக நியமிக்க கோரிக்கை

Update: 2024-12-26 17:29 GMT
2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் ஜனவரி 5ஆம்தேதி அதன் ஆயுள் காலம் முடிவடைகிறது, தேர்தல் நடத்துவதற்கான முகாந்திரம் இல்லை என்பதால் தமிழகத்தில் 28 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை  நடத்த வேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த காலதாமதம் ஏற்பட்டால் ஊராட்சி தலைவர்களை செயல் அலுவலராக அதாவது சிறப்பு அதிகாரியாக நியமித்து உள்ளாட்சி நிர்வாகத்தை தடையின்றி நடத்த வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பேரணியாக சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழ்நாடு முதல்வருக்கு மனுகொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதில், கூட்டமைப்பின் தலைவர் அ.நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி மனு அளித்தனர்.  இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 243 இ(3)(ஏ), ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் முடியும் முன்பு, அவற்றுக்கானத் தேர்தல் நடத்தி முடிப்பதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், எதிர்பாராத வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அல்லது மாநிலத்தில் நிலவும் அதி அவசர சூழல் போன்ற அசாதாரண உண்மைக் காரணங்கள் தவிர்த்து, வேறெந்த காரணத்திற்காகவும் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவை கடைபிடிக்காமல் இருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாத போது. முதலில் உயர்நீதிமன்றத்தையும், பிறகு உச்ச நீதிமன்றத்தையும் நாடி, தங்களுடைய அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்பதையும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது என்பதால் பதவிகாலம் முடிவடையும் முன்பு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அவ்வாறு  உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் ஊராட்சி மன்றத் தலைவர்களை செயல் அலுவலராக அதாவது சிறப்பு அதிகாரியாக நியமித்து உள்ளாட்சி நிர்வாகத்தை தடையின்றி நடத்த வேண்டும் என அக்கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News