அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம்: போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கேட்டும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை முதலே அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையை மீறி நடைபெறுவதால், போராட்டத்தில் பங்கேற்க வந்த பாஜகவினரை போலீஸார், கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், பாஜகவினருக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட வந்த அக்கட்சியின் கரு.நாகராஜன் உள்பட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீஸார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். முன்னதாக கைது செய்யப்பட்ட பாஜகவினர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், தமிழக அரசு மற்றும் காவல்துறையக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.