ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பஸ் கண்ணாடி உடைப்பு போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது
ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
அரியலூர், டிச.26- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அலாவுதீன் நகரைச் சேர்ந்த அப்துல்மஜீத் என்பவரது மகன் ஜாகிர் உசேன் (27) இவர் திருச்சியில் கோழிக்கடையில்ல் வேலை பார்த்து வருகிறார். பணி முடிந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார்- அப்போது போதையில் இருந்ததாக தெரிகிறது..இந்நிலையில் அரசு பஸ் ஒன்று கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து விட்டு மீண்டும் விருத்தாச்சலம் செல்வதற்காக சென்றபோது எதிரே போதை ஆசாமி ஜாகிர் உசேன் பஸ் செல்லும் சாலையில் நின்றதாகவும் டிரைவர் ஒதுங்கி நிற்கும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது.இதில் போதையில் இருந்த ஜாகிர் உசேன் தன்மீது பஸ்ஸை ஏற்ற வருகிறாயா? எனக்கூறி பஸ் முன்னாடி செல்ல பஸ்ஸில் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அரசு பஸ் டிரைவரான ஆண்டிமடம் திருக்களப்பூரைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் எசனூர் கிராமத்தைச் சேர்ந்த கண்டக்டர் வெங்கடேசன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்து ஜாகிர்உசேன் மீது ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜாகிர்உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜாகிர்உசேன் கையில் வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.