விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போகத்திற்கு ஜனவரி 10ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை

Update: 2024-12-27 03:46 GMT
கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போகத்திற்கு ஜனவரி 10ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனா்.ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். அப்போது, மேட்டூர் வலது கரை பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் பழனிசாமி பேசுகையில், வலதுகரை பாசனத்திற்கு கடந்த முறையே கடைமடைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடைமடை வரை சுத்தம் செய்து, தூர்வாரி தொடர்ந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதகுகள் சீரமைக்க வேண்டும். நெல் அறுவடை சமயத்தில் இயந்திரங்கள் மானிய விலையில் கிடைத்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவரும், வெண்மை புரட்சிக்கு வித்திட்ட எஸ்.கே.பரமசிவனுக்கு சித்தோடு ஆவின் நிறுவனத்தில் சிலை நிறுவப்படும் என்றும், அதேபோல், கீழ் பவானி பாசனம் உருவாவதற்கு காரணமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ தியாகி ஈஸ்வரனுக்கு பவானிசாகரில் முழு உருவச்சிலை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். கீழ்பவானி பாசன வாய்க்காலில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் செடி, கொடிகளை அகற்ற உத்தரவிட வேண்டும். கீழ்பவானி பாசனத்தில் தண்ணீர் கூடுதலாக வழங்கும்போது முறையான அறிவிப்புகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதன்மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நாய் வளர்ப்புகளுக்கு முறையான அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகள் குத்தகை பட்டா தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பின் ராமசாமி பேசுகையில், வாய்க்கால் மற்றும் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், மாசுபாடு, சட்ட விரோதமாக தண்ணீர் திருட்டு உள்ளன. தென்னை மரம் உள்ளிட்டவை வைத்து ஆக்கிரமிக்கின்றனர். கரையில் மரங்கள் வைக்க தடை விதிக்க வேண்டும். வரும் காலங்களில் இருவழிச்சாலை, நான்குவழிச்சாலையாக மாற வாய்ப்புள்ளது. எனவே, முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார். தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், தமிழக முதல்வர் பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அதிலும், குரங்கன் பாசன திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கி சீரமைப்பு பணி செய்ய உத்தரவிட்டதற்கு விவசாயிகள் சார்பாக முதல்வருக்கு நன்றியை கூறி கொள்கிறோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் தனி நபர் பயிர்கடனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கியதற்கு அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதேபோல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மானிய வட்டி கடனை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லச்டமாக உயர்த்தி வழங்க அரசுக்க பரிந்துரை செய்ய வேண்டும். தென்னை கொப்பரை கொள்முதல் விலையை ரூ.111.60 இருந்து ரூ.115.82 உயர்த்தி வழங்கியதற்கும் அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இயற்கை வேளாண்மை முறையில் கொப்பரை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சல்பர் போடாத கொப்பரை பருப்புகளுக்கு தனியே விலை நிர்ணயிக்க வேண்டும். அதற்கு அடிப்படை ஆதார விலையாக ரூ.130 ஆக நிர்ணயித்தால் உகந்ததாக இருக்கும். நெல்லுக்கு முறையான விலை நிர்ணயம் இல்லை. எனவே, ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.30 ஆக வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். கரும்பு கொள்முதலுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். அந்தியூர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. அதற்கான காரணம் என கால்நடைத்துறை விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எழுமாத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், மரவள்ளி மூலம் உற்பத்தியாகும் ஜவ்வரியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். சத்துணவில் ஜவ்வரிசியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி பாசனத்தில் 2ம் மண்டலத்திற்கு புஞ்சை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அப்போது, முதல் மண்டலத்தில் நனையாத பகுதிகளை கண்டறிந்து சிறப்பு நனைப்பாக தண்ணீர் திறக்க வேண்டும். கீழ்பவானி பாசன சபைக்கான தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார். காலிங்கராயன் பாசன சபை செயலாளர் குழந்தைவேலு பேசுகையில், நீண்ட நாள் கோரிக்கையான நீர்பாசன கருத்தரங்கினை நடத்த வேண்டும். காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு தொடர்பாக வெளிப்படையாக நடக்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் தூர்வாரப்படாததால் பல இடங்களில் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. மஞ்சள் அறுவடைக்கு கூலி அதிகம் ஆவதால், அதற்கு மாவட்ட நிர்வாகம் ஏதேனும் திட்டத்தை வகுக்க வேண்டும், என்றார். ஓடத்துறை ஏரி நீர் பாசன சங்கத்தின் தலைவர் வெங்கடாச்சலம் பேசுகையில், கீழ்பவானி 2ம் போக பாசனத்திற்கு ஜனவரி முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிட வேண்டும். கிளை வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓடத்துறை-கோபி செங்கப்பள்ளி சாலையில் இருபுறங்களிலும் ஏராளமான புளியமரங்கள் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மரங்களை வெட்டாமல் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர கால ஷர்ட்டர்கள் முறையாக சீரமைக்க வேண்டும். ஏரி கரைகளில் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும், என்றார். விவசாயி சிவசுப்பிரமணி பேசுகையில், ஆவினில் ரூ.18 கோடி மதிப்பிலான 600 டன் பால் பவுடர் தேக்கம் அடைந்துள்ளது. தற்போது ரூ.280க்கு விற்பனை ஆகி வருகிறது. இந்த சமயத்தில் விற்றால் நன்றாக இருக்கும். தரம் குறைந்து விட்டால் விற்பனை செய்ய முடியாது. இதனை விற்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் சுவிட் விற்பனை மோசடி விசாரணையில் துறை வாரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை தீவன ஆலையிலும் தீவனங்கள் திருட்டு நடந்து வருகிறது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபடுபவர்களை சஸ்பெண்ட் செய்திட வேண்டும், என்றார். கீழ்பவானி பாசன சபைக்கு விரைவில் தேர்தல் இதையடுத்து விவசாயிகளுக்கு கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது: பவானி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 5 இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். அவசர கால ஷர்ட்டர்கள் சீரமைக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்திற்கு ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக பாசனத்திற்கான தண்ணீர் திறப்பினை ஜனவரி மாதம் 3ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். விரைவில் அரசாணை வரும் என எதிர்பார்கிறோம். கீழ்பவானி பாசன சபை தேர்தல் அரசு அனுமதி அளித்ததும் விரைவில் நடத்தப்படும். காலிங்கராயன் வாய்க்கால் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் வலதுகரை பகுதியில் கடைமடை பகுதி தூர்வாரப்படும். வெறி நாய் தடுப்பூசி கால்நடை மருந்தகங்களிலும் தேவையான அளவு மருந்துகள் இருப்பு உள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முகாம் அமைத்து தெரு நாய்கள், செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்படும். அந்தியூர் பகுதியில் தடுப்பூசி செலுத்திய ஆடுகள் இறந்த விவகாரம் தொடர்பாக, இறந்த ஆடுகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் முகாம் அமைத்து நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூலம் பிற கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படா வண்ணம் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்த்ராக்ஸ் நோயானது கால்நடைகள் மூலம் மனிதர்களை தாக்கும். இதனால், அங்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது, என்றனர். கரும்பு-நெல்-மரவள்ளி விலை நிர்ணயம் அரசுக்கு பரிந்துரை: கலெக்டர் தகவல் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசுகையில் கூறியதாவது:காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் கோரிக்கைக்கு தீர்வு காண முத்தரப்பு கூட்டம் நீர்வளத்துறை சார்பில் நடத்தப்படும். வாய்க்கால் தூர்வார முதலில் முக்கியமான இடங்களில் மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை அந்த துறை சார்ந்த நிதியில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். நெல், கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களின் விலை நிர்ணயம் தொடர்பாக விவசாயிகள் கோரிக்கை அரசுக்கு தெரியப்படுத்தப்படும். கண்டிசன் பட்டா தற்போதைய நிலை குறித்து ஈரோட்டில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் அதற்கான அரசாணை வரும் என எதிர்பார்க்கிறோம். வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சாலை அமைக்கும்போது மரங்கள் வெட்டும்போது, ஒரு மரத்திற்கு 10 மரங்கள் நட வேண்டும் என்று உத்தரவிட்டுதான் அனுமதி அளிக்கிறோம். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இந்த கூட்டத்தில் விவசாயிகள் அளித்த 40 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளேன். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் லோகநாதன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மரகதமணி, ஈரோடு விற்பனைக்குழு துணை இயக்குநர் சாவித்திரி நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி, வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், பவானிசாகர் அணை கோட்ட அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News