சேலத்தில் கார் விற்பனையாளர் கிணற்றில் குதித்து தற்கொலை

எனது இறப்பிற்கு பிறகு மூடநம்பிக்கை சடங்குகளை செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவைத்துள்ளார்

Update: 2024-12-27 03:55 GMT
ஈரோடு மாவட்டம், கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் பாபு (வயது 54), கார் விற்பனையாளர். இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு அஜய் என்ற மகன் உள்ளார். நேற்று சேலத்தில் நடைபெற்ற உறவினரின் 60-வது திருமண விழாவில் பங்கேற்க தனது குடும்பத்துடன் சேலம் ஜட்ஜ் ரோட்டில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு கார்த்திக் பாபு வந்துள்ளார். காலையில் அவரது மனைவி மட்டும் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திருப்பினார். அப்போது வீட்டில் கடிதம் ஒன்று இருந்தது. அதில்,‘ கடவுள் நல்லவர்களை மட்டும் சீக்கிரம் எடுத்து கொள்கிறார். கடந்த சில மாதங்களாக நான் (கார்த்திக் பாபு) உடல்நிலை சரியில்லாமல் மனஉளைச்சலில் சிக்கி தவிக்கிறேன். எனது இறப்பிற்கு பிறகு மூடநம்பிக்கை சடங்குகளை செய்ய வேண்டாம். கிணற்றின் உரிமையாளர் என்னை மன்னிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அருகில் உள்ள கிணற்றுக்கு மனைவி சுதா சென்று பார்த்த போது, அந்த கிணற்றின் அருகே கணவரின் துணிகள் இருந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும், கன்னங்குறிச்சி போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து கார்த்திக் பாபுவின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த கார்த்திக் பாபு எழுதிய கடிதத்தை கைப்பற்றி தற்கொலைக்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News