சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை

லாட்டரி சீட்டு விற்ற 29 பேர் கைது

Update: 2024-12-27 03:57 GMT
சேலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பவர்கள், புகையிலை பொருட்கள் விற்பவர்களை பிடித்து போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சங்ககிரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கடன் பெற்று லாட்டரி சீட்டு வாங்கியதில் அதிகம் கடன் ஏற்பட்டதால், கடன் தொல்லை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி லாட்டரி சீட்டு விற்பவர்களை கைது செய்யும் படி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், மாவட்டத்திற்குட்பட்ட ஓமலூர், தாரமங்கலம், ஆத்தூர் டவுன், எடப்பாடி, பூலாம்பட்டி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி நின்றவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் மறைத்து வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. சேலம் மாவட்டத்தில் நேற்றும், நேற்று முன்தினம் என 2 நாட்கள் போலீசாரின் தீவிர சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த மொத்தம் 29 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News