சேலம் ஸ்ரீராமலிங்க வள்ளலார் பள்ளி செயல்பட வலியுறுத்தி
அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம் பழைய சூரமங்கலத்தில் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், அதே வளாகத்தில் பள்ளி செயல்பட வலியுறுத்தியும் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் புது ரோடு பஸ் நிறுத்த ரவுண்டானா அருகில் இருந்து ஏராளமானவர்கள் பள்ளியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதை அருந்ததியர் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் பிரதாபன் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அம்பேத்கார் மக்கள் இயக்க மாநில தலைவர் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் சுசீந்திரகுமார், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூமொழி, மக்கள் தேசம் கட்சி மாநில செயலாளர் சுலைமான், ஆதித்தமிழர் பேரவை மத்திய மாவட்ட செயலாளர் சந்திரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சதாம்உசேன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். இது குறித்து அம்பேத்கார் மக்கள் இயக்க மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கூறும் போது,‘பள்ளியில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை வேறு ஒருவருக்கு விற்றால் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கும். எனவே ஸ்ரீராமலிங்க வள்ளலார் பள்ளியை மூடாமல், அதே இடத்தில் செயல்பட மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.