குமரி மாவட்டம் கருங்கல் முள்ளங்கினா விளை பகுதியில் எட்வின் ராஜ் என்பவரின் உறவினருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. வணிக வளாக உரிமையாளர் சென்னையில் வசித்து வருவதால், எட்வின் ராஜ் அந்த வளாகத்தை கவனித்து வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வணிக வளாக உரிமையாளர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர்கள் வந்த கார் டிரைவரை வணிக வளாக முதல் மாடியில் உள்ள ரூமில் தங்க வைத்திருந்தனர். டிரைவர் ரூமில் உறங்கிக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் அவரது செல் போன் மற்றும் 3000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். இது தொடர்பாக எட்வின் ராஜ் கருங்கல் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ஏற்கனவே வந்து சென்ற அதே வாலிபர் ஒரு சைக்கிளில் வணிக வளாகத்தில் வந்து, அவர் விட்டு சென்ற பையை எடுப்பதற்காக வந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் வாலிபரை பிடித்து கருங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவரை கைது செய்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.