குமரி மீனவர்களை கண்டுபிடிக்க கோரி போராட்டம்
மீன் தொழிலாளர்கள் யூனியன் அறிவிப்பு
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் அதன் தலைவர் பீட்டர் தாஸ், செயலாளர் அலக சாண்டர் ஆகியோர் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மரிய நசரேயன் மகன் சகாய செல்சோ, ஜார்ஜ் மகன் ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகிய இருவரும் மீன் பிடித்து தொழிலாளர்கள். இவர்கள் வளைகுடா நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி படகில் இவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இரண்டு நாட்களில் கரை திரும்ப வேண்டியவர்கள் ஆனால் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. உறவினர்கள் விசாரித்த போது படகு உரிமையாளர் அங்குள்ள போலீசில் தனது படகு காணாமல் போய்விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த படகில் இருந்த மீனவர்கள் சகாய செல்சோ, ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோர் நிலைமை தொடர்பாக எந்த தகவலும் குறிப்பிடவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் ஒன்றிய மாநில அரசுகள் சார்பில் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. எனவே ஒன்றிய மாநில அரசுகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு கடலில் மாயமான மீனவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்பதை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு வரும் 31ஆம் தேதி கன்னியாகுமரி அண்ணா சிலை முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.