காளையார்கோவில் அருகே நான்கு முக சூலக்கல் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே இலந்தகரையில் நான்கு முக சூலக்கல் கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே இலந்தகரையில் அரிதான நான்கு முக சூலக்கல் கண்டறியப்பட்டது. இதில் நான்கு பக்கமும் திரிசூலம் பதியப்பட்டுள்ளது. 3 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டதாக உள்ளது. இதனை ஆய்வு செய்த தமிழக சுற்றுலா அருங்காட் சியகக் குழுவில் இடம்பெற்றுள்ள வரலாற்று ஆய்வாளர் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறும்போது இலந்தகரையைச் சேர்ந்த ரமேஷ் அளித்த தகவல் அடிப்படையில் அங்குள்ள சூலக்கல்லை ஆய்வு செய்தோம். சூலக்கல்லில் நான்கு பக்கமும் திரிசூலம் இருப்பது அரிதானது. அக்காலத்தில் பாண்டியர், சோழர், சேதுபதி மன்னர்கள் கோயிலுக்கு தானமாக வழங்கும் நிலங்களின் எல்லைகளை குறிக்க 4 திசைகளிலும் கற்களை ஊன்றி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. வைணவக் கோயில்களுக்கு (பெருமாள் கோயில்) சங்கு சக்கர குறியீடு பொறித்த திருவாழிக்கல், சமண கோயில் நிலங்களுக்கு முக்குடைக்கல்லும், சைவக் கோயில்களுக்கு (சிவன், காளி, அய்யனார்) சூலக்கல்லும் எல்லைக் கல் நடப்படும். தான நிலங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் கோயிலில் அன்றாட பூஜைகள் செய்தல், விளக்கு ஏற்றுதல், அமுது படைத்தல், ஆலய பராமரிப்பு பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படும். இலந்தகரையில் சூலக்கல் கிடைத்ததால், இப்பகுதியில் சிவன் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஆனால் அந்த கல்லில் எழுத்துகள் இல்லை. அதனால் எந்த மன்னர் கொடுத்தார் என்ற விவரம் தெரியவில்லை. அதேபோல், அருகேயுள்ள சேதாம்பல் கிராமத்தில் மற்றொரு சூலக்கல் கிடைத்துள்ளது. அதில் ஒரு பக்கம் மட்டுமே திரிசூலம் உள்ளது. அது 2 அடி உயரம், ஒரு அடி அகலம் உள்ளது என்று தெரிவித்தார்.