குடிநீர் குழாய் பணிகளால் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் சிரமம்

திருப்புவனம் அருகே முன்னறி விப்பின்றி காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணி தொடங்கியதால் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.;

Update: 2024-12-27 07:17 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஏனாதி, கனக்கன்குடி, பாப்பாகுடி, கே.பெத்தானேந்தல், மணல் மேடு. கருங்குளம், கண்ணாரிருப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தனித்தனியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் அனைத்தும் மடப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சிவகங்கையில் இருந்து கண்ணாரிருப்பு, மடப்புரம் வழியாக திருப்புவனத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(டிச.26) காலை முன்னறிவிப்பின்றி மடப்புரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதையறியாமல் வந்த பேருந்துகள் பாதி வழியில் திருப்பிவிடப்பட்டன. மேலும் இவ்வழியாக இயக்கப்பட்ட 8 பேருந்துகளும் திடீரென நிறுத்தப்பட்டதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிரமமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் திடீரென பேருந்துகளை நிறுத்தியதால் எதிர்பார்த்து காத்திருந்தோர் சிரமப்பட்டனர். காவிரி திட்ட குழாய்கள் பதிக்கும் பணியை போக்குவரத்துக்கு இடையூறின்றி மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது திருப்பாச்சேத்தி வழியாக ஏனாதி, பாப்பாகுடிக்கும், கருங்குளத்துக்கும் பேருந்துகளை இயக்கினோம் என்றனர்.

Similar News