நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே மோதல் - தற்காப்பிற்காக கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்ட அதிமுக நிர்வாகியால் பரபரப்பு

நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே மோதல் - தற்காப்பிற்காக கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்ட அதிமுக நிர்வாகியால் பரபரப்பு

Update: 2024-12-28 05:45 GMT
நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே மோதல் - தற்காப்பிற்காக கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்ட அதிமுக நிர்வாகியால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றிய அதிமுக கவுன்சிலரான கலாவதியின் கணவரான தச்சனேந்தல் சந்திரன் என்பவரை அதிமுக தலைமை கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரிக்குடி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக நியமித்தது. இதற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளரான நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த பூமிநாதனை திடீரென ஒன்றிய செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ராஜவர்மன் ஆதரவாளரான தச்சனேந்தல் சந்திரன் என்பவருக்கு நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளராக பதவி வழங்கப்பட்டது. இதனால் நரிக்குடி ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்களின் பதவி பறிப்பால் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குறித்து நரிக்குடி அதிமுக வாட்ஸ்அப் சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்டனர். இதில் நடந்த கார சார விவாதத்தை தொடர்ந்து ராஜவர்மன் ஆதரவாளரான நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளரான விருதுநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளரும், திரைப்பட இயக்குநருமான பிரபாத் வீட்டிற்கு இன்று அது மீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக நிர்வாகி பிரபாத்தின் மகன் மிதின் சக்கரவர்த்தியை சந்திரன் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரபாத் உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியை வைத்து தற்காப்பிற்காக வானத்தை நோக்கி சுடும் போது வீட்டின் மேற்கூரையில் குண்டு பட்டு பலத்த சத்தத்துடன் கேட்டதை தொடர்ந்து சந்திரன் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிய வருகிறது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அ.முக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி டி.எஸ்.பி பொன்னரசு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட சந்திரன் தரப்பை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கல்விமடை கிராம நிர்வாக அலுவலர் ரகுநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி பிரபாத் மீது தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் திருச்சுழி தொகுதியில் அதிமுகவினர் இடையே மோதல் உச்சத்தை எட்டி உள்ளதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News