விவசாயிகள் பம்ப் செட்டுகளை வீட்டில் இருந்தபடியே இயக்கலாம்

சிவகங்கை மாவட்டம், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், விவசாய பணிகளுக்கான பம்புசெட்டுகளை வீடுகளில் இருந்த படியே இயக்குவதற்கான கருவி மற்றும் புதிய மின் மோட்டார் பம்பு செட்டு கருவி ஆகியவைகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.;

Update: 2025-01-01 10:33 GMT
சிவகங்கை மாவட்டம், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், விவசாய பணிகளுக்கான பம்புசெட்டுகளை வீடுகளில் இருந்த படியே இயக்குவதற்கான கருவி மற்றும் புதிய மின் மோட்டார் பம்பு செட்டு கருவி ஆகியவைகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக, சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கைபேசியால் இயங்கும் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி, வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் 98 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தலா ரூ.7,000/- அல்லது ரூ.5,000/- வீதம் மானியம் வழங்க ரூ.6.86 இலட்சம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக் காலங்களில், வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்களை இயக்க செல்கிறார்கள். அவ்வாறு, செல்லும் போது பாம்புக்கடி விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்க நேரிடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், தங்களது பம்புசெட்டுகளை வீடுகளில் இருந்த படியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இக்கருவிகள் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளை தொலைவில் இருந்தே கைபேசியின் மூலம் இயக்க, கண்காணிகக் மற்றும் நிறுத்திடவும் முடியும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000/- மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.5,000/- மானியமாக வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மின் மோட்டார் பம்புசெட் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 90 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதிகப்பட்சமாக ரூ.15,000/- மானியம் வழங்க ரூ13.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் உள்ள பழைய மின் மோட்டார் பம்புசெட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது புதிதாக அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.15,000/- வரை மானியம் வேளாண் பொறியியல் துறையின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளர் (வே.பொ) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மின் மோட்டார் வாங்க வேண்டும். இதற்கென 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000/- என இதில், எது குறைவோ அத்தொகை மானியமாக விவசாயிகளின் வங்கிகணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் ஆகிய வட்டாரங்களைச் சார்ந்த விவசாயிகள் - சிவகங்கை தொண்டி ரோட்டில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), சிவகங்கை அலுவலகத்தினை நேரிலோ அல்லது 9080230845 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டும், தேவகோட்டை, சிங்கம்புணரி, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய வட்டாரங்களைச் சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), காரைக்குடி அலுவலகத்தை நேரிலோ அல்லது 9442225856 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டும் விவரங்கள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News