கூட்டுறவு துறை மூலம் பயனடைந்த விவசாயிகள் முதலமைச்சர் நன்றி தெரிவித்தனர்
சிவகங்கை மாவட்டம் , கூட்டுறவுத்துறையின் மூலம் பல்வேறு வகையான கடனுதவிகள் பெற்று பயனடைந்த விவசாயிகள், தமிழ்நாடு முதலமைசருக்கு மனநிறைவுடன் நன்றியினை தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் , கூட்டுறவுத்துறையின் மூலம் பல்வேறு வகையான கடனுதவிகள் பெற்று பயனடைந்த விவசாயிகள், தமிழ்நாடு முதலமைசருக்கு மனநிறைவுடன் நன்றியினை தெரிவித்தனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் நல்லாட்சி நடத்திக் கொண்டு வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அதில், குறிப்பாக கூட்டுறவுத்துறையின் வாயிலாக பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலான எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளூவர் மாவட்டத்தில் “திரூர்” என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் கூட்டுறவுத்துறை, தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது பெருமைக்குரியதாகும். மேலும், தனிநபரின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாகவும், சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு கைகொடுத்து தூக்கிவிடும் துறையாகவும் கூட்டுறவுத்துறை விளங்கி வருகிறது. அதனடிப்படையில், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்பட நடப்பு நிதி ஆண்டில் ரூபாய் ஒரு இலட்சம் கோடி கடன்கள் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் பயிர்க்கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகைக்கடனுதவி, சுய உதவிக்குழு கடனுதவி, சிறு வணிக கடனுதவி, மகளிர் தொழில்முனைவோர் கடனுதவி, பணிபுரியும் மகளிர் கடனுதவி, ஆதரவற்ற பெண்களுக்கான கடனுதவி, மத்திய கால கடனுதவிகள், பண்ணை சாரா கடனுதவிகள், தானிய ஈட்டு கடனுதவிகள், டாப்செட்கோ கடனுதவிகள், டாம்கோ கடனுதவிகள், தாட்கோ கடனுதவிகள், வீட்டு வசதி கடனுதவிகள், வீட்டு அடமான கடனுதவிகள், வாகன கடனுதவிகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கான கடனுதவிகள், மாற்றுத்திறனாளி கடனுதவிகள், சம்பள கடனுதவிகள், நுகர்வோர் கடனுதவிகள், காலி வீட்டுமனை வாங்க கடனுதவிகள் மற்றும் இதர கடனுதவிகள் என மொத்தம் 34 வகையான கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதில், கூட்டுறவுத்துறையின் வாயிலாக விவசாயிகளுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து, அதனை சிறப்பாக செயல்படுத்தியும், விவசாயிகளின் உற்ற தோழனாக கூட்டுறவுத்துறை திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், விவசாயிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன்களை வழங்கியும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்பீடுகளின் போது, பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில் பயிர்க்கடனுதவிகளை தள்ளுபடி செய்தும் விவசாயிகளுக்கு உறுதுணையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி திகழ்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 211 வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் தவிர, சிவகங்கை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், தொழில் கூட்டுறவு சங்கங்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் என மொத்தம் 439 கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்களை வழங்குவதற்கும், வேளாண் சாகுபடி குறித்த தகவல்கள் அளிப்பதற்கும், விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்திட சந்தை வாய்ப்புகளை அமைத்து தருவதற்கும், விவசாயத்தை இலாபகரமாக மாற்றி அதிக வருவாய் பெரும் நோக்கில் 2 உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்திடும் வகையில், 7 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருவதுடன், மேலும் 12 இடங்களில் முதல்வரின் மருந்தகம் அமைத்திட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் கூட்டுறவுத்துறையின் சேவைகள் சென்றடையும் வகையில், 100 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் சூசையப்பர்பட்டினம், முனைவென்றி, மழவராயனேந்தல் மற்றும் முப்பையூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும், முத்துப்பட்டி, சிராவயல், கொம்புக்கரனேந்தல், கழுவன்குளம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விரிவாக்க மையங்களும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோன்று, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் பணிகளும், கூட்டுறவு வங்கி/ சங்கங்களில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடன் விண்ணப்பங்கள் Online வாயிலாக சமர்ப்பித்திட ஏதுவாக கூட்டுறவு எனும் செயலியும் உருவாக்கப்பட்டு, கூட்டுறவுத்துறையின் பதிவாளர் அலுவலகம், மண்டல மற்றும் சரக அலுவலகங்கள், மின் அலுவலகமாக (e-Office) மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது போன்று, பொதுமக்களுக்கு எளியமுறையில் கூட்டுறவுத்துறையின் சேவைகள் கிடைக்கபெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, கடனாளிகளின் நிதிச்சுமையை குறைத்திடும் வகையில், கூட்டுறவு வங்கி/ சங்கங்களில் நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ள, பண்ணை சாரா கடன்களை வசூல் செய்திட தமிழக அரசால் சிறப்பு கடன் தீர்வைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வட்டி குறைப்பு திட்டத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1,410 கடன்தாரர்கள் வட்டி சலுகை பெற்று பயனடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்பட நடப்பு நிதி ஆண்டில் ரூ.1388.87 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 87,828 உறுப்பினர்களுக்கு ரூ.530.15 கோடி மதிப்பீட்டில் பயிர்கடனுதவியும், 33,904 உறுப்பினர்களுக்கு ரூ.178.63 கோடி மதிப்பீட்டில் கால்நடைப்பராமரிப்பு கடனுதவியும், 3,86,809 உறுப்பினர்களுக்கு ரூ.2,623.52 கோடி மதிப்பீட்டில் நகைக்கடனுதவியும், 3,916 குழுக்களுக்கு ரூ.278.56 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக்குழு கடனுதவியும், 2,303 உறுப்பினர்களுக்கு ரூ.7.97 கோடி மதிப்பீட்டில் சிறுவணிக கடனுதவியும், 720 உறுப்பினர்களுக்கு ரூ.7.18 கோடி மதிப்பீட்டில் மத்திய கால கடனுதவியும், 41 உறுப்பினர்களுக்கு ரூ.4.24 கோடி மதிப்பீட்டில் தானிய ஈட்டுக்கடனுதவியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மேம்பட, பொருளாதாரம் மற்றும் வருவாய் ஈட்டும் தொழில்களை மேற்கொள்ள ஆண்களுக்கு 5% வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும், கடனை கெடுகாலத்திற்குள் செலுத்தினால் வட்டியில்லாமலும் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 905 உறுப்பினர்களுக்கு ரூ.5.57 கோடி மதிப்பீட்டில் மாற்றத்திறனாளிகள் கடனுதவியும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஆண்களுக்கு 5% வட்டி விகித்திலும், பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.0.90 கோடி மதிப்பீட்டிலான டாச்செட்கோ கடனுதவியும், சிறுபான்மையினர் வகுப்பை சார்ந்தவர்களுக்கு 4% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.02.18 கோடி மதிப்பீட்டிலான டாம்கோ கடனுதவியும் தற்சமயம் வரை கூட்டுறவுத்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. ”பயிர்கடனுதவி” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கோட்டையூர் அழகாபுரி கிராமத்தை சார்ந்த விவசாயி கார்த்திக் தெரிவிக்கையில், எனது பெயர் கார்த்திக் நான் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பள்ளத்தூர் அருகில் உள்ள கோட்டையூர் அழகாபுரி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் வசித்து வரும் கிராமத்திலேயே எனக்கு சொந்தமான சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகிறேன். நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். முன்னதாக, அரசினர் பள்ளியில் தற்காலிமாக உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். விவசாயத்தின் மீது நான் கொண்ட விருப்பத்தினால் ஆசிரியர் பணியினை விட்டுவிட்டு, விவசாயப் பணியின் மீது முழு கவனம் செலுத்த தொடங்கினேன். அவ்வாறாக, விவசாயப்பணியினை மேற்கொள்ள தொடங்கியபோது, என்னிடம் விவசாயத்திற்கு தேவைப்படும் இடுபொருட்கள் வாங்க போதுமான நிதி வசதியின்றி சிரமமடைந்தேன். அச்சமயம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக வழங்கப்படும் பயிர் கடனுதவிகள் பற்றி அறிந்து, நான் வசிக்கும் பகுதிக்குட்பட்ட பள்ளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை அணுகினேன். எனது விளைநிலத்திற்கு ஏற்றவாறு எனக்கு நெல் பயிர் கடனுதவி காலவரையறையனை அடிப்படையாக கொண்டு 8 மாதம் வரை வட்டி இல்லாமல் வழங்கப்பட்டது. அத்தொகையினை வைத்து எனது விவசாயப் பணிகளை மேற்கொண்டு, விளைவித்த பொருட்களை சந்தை படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் இலாபத்தின் வாயிலாக, பின்னர் அக்கடன் தொகைக்கான தவணை முறையினை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி வருகிறேன். அதேபோன்று, இந்தாண்டும் எனது விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பள்ளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நெல் பயிர் கடனுதவி வேண்டி விண்ணப்பித்து இருந்தேன். அதனைத்தொடர்ந்து, ரூ.1,14,000/- க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. அவ்வாறாக, கிடைக்கப்பெற்ற கடனுதவியின் வாயிலாக எனது விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை வாங்கி அதனை பயன்படுத்தினேன். எனது விவாசயமும் தற்போது சிறப்பாக உள்ளது. மேலும், எங்கள் பகுதியில் பல விவசாயிகள் அவர்களின் விவசாய பணிகளுக்கென பள்ளத்தூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாய கடன் பெற்று உரிய தவணையில் வட்டி இல்லாமல் கடன் தொகையை திருப்பி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமன்றி, விவசாயத்திற்கு தேவைப்படும் உரம் போதுமான அளவிற்கு, இச்சங்கத்தின் மூலம் உடனடியாக கிடைப்பதும் எங்களைப்போன்ற கிராமப்புற விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. இவ்வாறாக, விவசாயிகளின் நிலையிலிருந்து சிந்தித்து, விவசாயம் மேற்கொள்வதற்கு தேவைப்படும் நிதியினை கடனுதவி மூலமாக வழங்கி உதவி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது சார்பிலும், எங்கள் பகுதியைச் சார்ந்த விவசாயிகளின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரித்துக்கொள்கிறேன் என விவசாயி கார்த்திக் தெரிவித்தார். ”கால்நடை பராமரிப்பு கடனுதவி மற்றும் பயிர்கடனுதவி” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற காரைக்குடி வட்டம், சூரக்குடி கிராமத்தை சார்ந்த விவசாயி திரு.வீரபெருமாள் அவர்கள் தெரிவிக்கையில், எனது பெயர் வீரபெருமாள். நான் காரைக்குடி வட்டம், பள்ளத்தூர் அருகில் உள்ள சூரக்குடி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் எனது கிராமத்தில் எனக்கு சொந்தமான இடத்தில் நெல் பயிரிட்டும், கால்நடைகளை வளர்த்தும், விவசாய தொழில் மேற்கொண்டு வருகிறேன். நான் எனது விவசாயம் மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியின்றி சிரமமடைந்து வந்தேன். அச்சமயம் பள்ளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக கடந்த 13 ஆண்டுகளாக என்னை போன்ற விவசாயிகள் எவ்வித தடையுமின்றி நெல் பயிர்கடனுதவி, தென்னை பராமரிப்பு கடனுதவி, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு கடனுதவி, கரும்பு பயிர்கடனுதவி போன்ற கடனுதவிகள் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டியில்லாமல் வழங்கப்படுவது குறித்து, அறிந்து கொண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை அணுகி, கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து, உடனடியாக கடனுதவி பெற்று பயனடைந்தேன். இடையூமின்றி விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதல் வட்டிக்கு கடன் பெறாமல், குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி இல்லா கடனை முன்கூட்டியே வழங்கியும் என்னைப் போன்ற விவசாயிகளுக்கு தமிழக அரசு உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறது. இவ்வாண்டும், நான் பள்ளத்தூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக ரூ.70,000 /-க்கான பசுமாடு பராமரிப்பு கடனுதவியும், ரூ.88,800/- மதிப்பீட்டிலான கேசிசி நெல் பயிர்கடனுதவியும் பெற்று, பயனடைந்து வருகிறேன். இவ்வாறாக எங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கிடைக்கப்பெறும் கடனுதவிகள் மூலம், எங்களது விவசாய பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயை வைத்து எங்களது அடிப்படை தேவைகள பூர்த்தி செய்வதற்கு உறுதுணையாக இருந்து, கடனுதவி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசிற்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது சார்பிலும், என்னைப் போன்ற விவசாயிகளின் சார்பில் மனநிறைவுடன் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என விவசாயி வீரபெருமாள் தெரிவித்தார்.