நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் சாம்பியன் பட்டம் வென்று தமிழக அணிகள் வரலாற்று சாதனை

கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பள்ளியில் தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் ஆண்கள் பெண்கள் இருபிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்று தமிழக அணிகள் வரலாற்று சாதனை படைத்தது

Update: 2025-01-01 11:28 GMT
திருவள்ளூர் கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பள்ளியில் தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர்.ஆண்கள் பெண்கள் இருபிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்று தமிழக அணிகள் வரலாற்று சாதனை படைத்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்ஷியல் பள்ளியில் 30வது தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. தமிழ்நாடு அமெச்சுர் நெட்பால் சங்கம் மற்றும் இந்திய நெட்பால் சம்மேளனம் இணைந்து இந்த போட்டியை நடத்தியது. சப் ஜூனியர் பிரிவில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இத்தொடரில் 28 மாநிலங்களை சேர்ந்த 54 அணிகள் பங்கேற்றன. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் போட்டியில் தமிழக அணியும் கேரள அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக ஆண்கள் அணி 29க்கு 26 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.இதேபோல் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக அணியும் அஸ்ஸாம் அணியும் மோதின. இதில் 17க்கு 14 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தமிழக பெண்கள் அணி சாம்பியன் ஆனது.பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய நெட்பால் சம்மேளன தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்திரசிங் ஆர்.எம்.கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் ஆகியோர் பங்கேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு சாம்பியன் பட்டத்தையும் பரிசுக்கோப்பைகளை வழங்கினர். மேலும் இரண்டாம், மூன்றாம், நான்காம் இடம் பிடித்த அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.தேசிய அளவிலான நெட்பால் தொடரில் தமிழ்நாடு ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் ஒரே நேரத்தில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் தனித்திறனுடன் செயல்பட்ட 20 வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News