சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விதவைகள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளி பெண்கள் திருநங்கைகள் மற்றும் மிகவும் ஏழ்மையில் உள்ள பெண்கள் 100 நபர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீத மானியத்தில் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.3 ஆயிரத்தி 200 மதிப்பிலான 40 அசில் வகை நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு கோழி குஞ்சுகள் வளர்ப்பு முறை குறித்து பயிற்சி முகாம் நேற்று நடந்தது. சின்னசேலம் கால்நடை மருந்தகத்தில் நடந்த முகாமிற்கு கால்நடை துறை உதவி இயக்குனர் கந்தசாமி தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் மையம் பேராசிரியர் முரளி கோழி வளர்ப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் பேபிஉஷா, ஜெயகாந்தி, முருகேசன், செந்தமிழன், வினிதாலோகநாதன், கால்நடை ஆய்வாளர் மாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.