கோவை: பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் !
சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஸ் கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு அளித்தார்.
சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஸ் நேற்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு அளித்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில் கோவையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலூரில் இருந்து தொண்டர் ஒருவர் போனில் அழைத்ததாகவும், இரண்டு பேரை கொலை செய்ய இருப்பதாகவும், கொலை செய்த பின் தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும் படியும் தெரிவித்ததாக கூறினார். இதன் மூலம் அவர் கோர்ட்டுக்கு யாராவது சென்றால் கொலை செய்ய வேண்டும் என தூண்டுகிறார். அதே போல் மத கலவரத்தையும், வன்முறையையும் தனது பேச்சு மூலம் தூண்டி வருகிறார். அவர் மீது கோர்ட்டில் இரண்டு வழக்குகள் தொடர்ந்திருக்கிறேன். அவர் பேசிய அன்றே கோவை மாநகர போலீசருக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பி இருக்கிறேன். அதற்கு எந்த பதிலும் இல்லாததால் நேரில் வந்து புகார் கொடுத்திருக்கிறேன் என்று கூறினார்.