குப்பை தொட்டியிலிருந்து பெண் குழந்தை சடலமாக மீட்பு

குப்பை தொட்டியிலிருந்து பெண் குழந்தை சடலமாக மீட்பு;

Update: 2025-01-03 13:53 GMT
மதுரவாயல் அருகே குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓடமா நகரில் கன்னியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள பகுதியில் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் துணி சுற்றப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாளேயான பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குழந்தையின் சடலத்தை வீசிச் சென்றவர்கள் யார், வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை இறந்ததால் சடலமாக வீசிச் சென்றார்களா அல்லது முறை தவறிய உறவால் பிறந்த குழந்தையை கொன்று வீசிச் சென்றுள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிறந்து ஒரு நாளேயான பெண் குழந்தையின் சடலம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News