குறைந்தபட்ச சம்பளத்தால் திணறல் துாய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்குவதாக குற்றச்சாட்டு;

Update: 2025-01-04 12:39 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ,கிராம ஊராட்சிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் விதமாக, ஊராட்சிகள் தோறும் துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அதாவது, ஊராட்சிக்கு ஒரு துாய்மை காவலரும், 150 குடும்பங்களுக்கு ஒரு துாய்மை பணியாளர் என, அந்தந்த ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, துப்பரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. உரம் தயாரிப்பு வீடுகள்தோறும் சேகரித்து வைத்துள்ள குப்பை கழிவுகளை, இப்பணியாளர்கள் பெற்று, அவற்றை ஊராட்சியின் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு, மட்கும் மற்றும் மட்காத குப்பை என, தரம் பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரித்தெடுக்கும் குப்பைகளில், மட்கும் வகையிலான குப்பைகளை உரக்குழியில் போட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. மட்காத குப்பை கழிவுகளை, ஒன்றிய அளவிலான நெகிழி அரைக்கும் கூடங்களுக்கு துாய்மை வாகனம் வாயிலாக அனுப்பி வைக்கின்றனர். அங்கு, மட்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை அரைக்கப்படுகிறது. பின், தார் உற்பத்தி போன்றவைக்கு பயன்படுத்தப்படுகிறது. துப்பரவு பணிகளில் ஈடுபடும் துாய்மை காவலருக்கு, மாத ஊதியமாக 9,000 ரூபாய் ஊராட்சி வங்கி கணக்கில் இருந்து வழங்கப்படுகிறது. துாய்மை பணியாளர்களுக்கு, மாத தொகுப்பூதியமாக, 5,000 ரூபாய் ஊராட்சி நிர்வாக கணக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, வறுமை ஒழிப்பு சங்கம் வாயிலாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்த தொகை போதுமானதாக இல்லை. இதை கொண்டு செலவுகளை சமாளிக்க முடியவில்லை என, துாய்மை பணியாளர்கள் பலரும் புலம்புகின்றனர்.

Similar News