அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் ஆங்கில பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை தகவல்
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எளிய முறையில் ஆங்கில பாடம் கற்பித்தல் தொடர்பாக பெங்களூரில் ஒரு மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பிலும் ஆசிரியர்களுக்கு திறன்சார் பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதன்படி அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் உள்ள தென்னிந்திய மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலம் ஆங்கிலம் கற்பித்தல் குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி முகாம் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். இதில் ஏற்கெனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தவிர்த்து, விருப்பமுள்ள ஆசிரியர்களை கண்டறிந்து பங்கேற்கச் செய்ய வேண்டும். ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கையொப்பமிட்டு ஜனவரி 7-ம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.