கோவை: பசுமாடு திருட்டு வழக்கு - இருவர் கைது
கோவையில் பசுமாடு திருட்டு வழக்கில் நீலகிரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, ஜடையம்பாளையம் தாளனூர் பகுதியைச்சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(63).இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.மேலும்,பசு மாடு ஒன்றை வளர்த்து அதன் மூலம் பால் கறந்து விற்பனையும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது பசு மாட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் வீட்டின் முன்புறமுள்ள உள்ள கொட்டகையில் கட்டி விட்டு உறங்கச்சென்றுள்ளார்.மறுநாள் எழுந்து பார்த்த போது பசுமாடு திருடு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிறுமுகை இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸாரின் விசாரணையில் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியைச்சேர்ந்த கமாலுதீன்(50) மற்றும் கோத்தகிரி இடுகொறை அட்டி பகுதியைச்சேர்ந்த ஜெயக்குமார்(31) உள்ளிட்ட இருவரும் பசு மாட்டினை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.