அண்ணா பிறந்தநாள் மாரத்தான் ஓட்ட போட்டி
சிவகங்கை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், மாரத்தான் ஓட்டப் போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர். பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், மாரத்தான் ஓட்டப் போட்டியினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர். பெரியகருப்பன் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நமது அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், வயது வரம்புகளின் அடிப்படையில் சைக்கிள் போட்டிகள் மற்றும் நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் உள்ளிட்டவைகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நேற்றைய தினம் (04.01.2025) பள்ளி மாணாக்கர்களிடையே சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, இன்றையதினம் நெடுந்தூர ஓட்டப்போட்டி (மாரத்தான்) நடத்திட திட்டமிடப்பட்டு, சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக நடைபெற்ற போட்டிகளில் 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் மாணவர்களுக்கு 8 கி.மீ. தூரத்திற்கான போட்டியில் 78 மாணவர்களும், மாணவியர்களுக்கு 5 கி.மீ. தூரத்திற்கான போட்டியில் 43 மாணவியர்களும், 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆடவர்களுக்கு 10 கி.மீ. தூரத்திற்கான போட்டியில் 38 நபர்களும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரத்திற்கான போட்டியில் 7 பெண்களும் என மொத்தம் 166 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்று, முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/-மும், 4 முதல் 10ம் வரை இடம் பெறுபவர்களுக்கு ரூ.1,000/-மும் பரிசுத்தொகையாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாராட்டு சான்றிதழ்களும், வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலத்தினை சரிவர பேணிக்காப்பதற்கு அடிப்படையாக பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ”நடப்போம் நலம்பெறுவோம்” திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையிலும், பொது மக்களிடையே தினமும் நடப்பதை ஒரு பழக்கமாக மாற்றும் நோக்கில், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்கள் இணைந்து மொத்தம் 8 கி.மீ தூரத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டும், அதில் மருத்துவ முகாம்களும் நிறுவப்பட்டு நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். ”நடப்போம் நலம்பெறுவோம்” திட்டமானது சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதிகளில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இன்றையதினம் சிவகங்கையில் நடைபெற்ற ”நடப்போம் நலம்பெறுவோம்” இத்திட்டத்தின் செயல்பாடுகளை காண்கின்ற வகையில்,பெருமிதம் கொள்ளும் வண்ணம் உள்ளது. இதுவே இத்திட்டத்தின் வெற்றியாகும். இதுபோன்று பொதுமக்களின் உடல்நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு, அரசால் செயல்டுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அதில் தங்களது பங்களிப்பினை முழுமையாக அளித்து, அவ்வாறாக நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, தங்களது உடல் நலத்தினை முறையாக பேணிக்காத்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.