ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு நடத்த விதிமுறைகள்
சிவகங்கை மாவட்டம், பொங்கல் விழாவினை முன்னிட்டு, நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு / வடமாடு /மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, விழாக்குழுவினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் முழுமையாக பின்பற்றி சிறப்பாக நடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் மே-2025 வரையுள்ள காலங்களில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆகியவைகள் குறித்து, தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு, அதனை விழாக்குழுவினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் முறையாக பின்பற்றுதல் வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை, அரசிற்கு அனுப்பி, பின்னரே, நிகழ்வு நடத்தப்பட அனுமதிக்க வேண்டுமென்பதால், சம்பந்தப்பட்ட நிகழ்வு நடத்தும் விழாக்குழுவினர் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியருக்கு http://www.jallikattu.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பக்க வேண்டும். அரசிதழில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு/வடமாடு நிகழ்ச்சிகளுக்கு உரிய காப்பீடு (ரூ.1கோடி)க்கு உரிய காப்பீட்டு நிறுவனத்திடம் பெற்று அதனை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு விழா குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுளை விழா நடைபெறுவதற்கு முன்னர் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பாக அனைத்து பணிகளையும் வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு பூர்த்தி செய்யும் பட்சத்திலேயே ஜல்லிக்கட்டு நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் இறுதி உத்தரவு வழங்கப்படும். விழாவில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திட வேண்டும். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள், முன்னரே தெரிவித்து முன் அனுமதி பெறுதல் வேண்டும். பங்கேற்பாளர்கள் குறித்த விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும். பங்கேற்க உள்ள காளைகளுக்கு எவ்விதமான ஊக்கமருந்துகளோ (Enhancment Drugs) மற்றும் எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ (Irritants) செலுத்தக்கூடாது. காளைகளின் மீது ஜிகினா துாவூதல், கண்களில் எலுமிச்சைச்சாறு பிழிதல், எண்ணெய் தடவுதல் கூடாது. ஜல்லிக்கட்டினை திறந்த வெளியில் நடத்திட வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் மருத்துவ பரிசோதனை செய்யும் காளை சேகரிப்பு மையம் ஆகிய இடங்களில் ஷாமியானா பந்தல் அல்லது கூரை அமைத்து காளைகளை வெயிலிருந்தும், மழையிலிருந்தும், பாதுகாக்க வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், காளை சேகரிப்பு மையம் மற்றும் தேவைப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நிகழ்வுகள் கண்காணிக்கப்படும். மேலும் ஒரே தேதியில் விழா நடத்த விண்ணப்பிக்கப்படும் நேர்வில், முதல் விண்ணப்பம் மட்டும் அந்த தேதியில் நடத்த அனுமதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனைக் கருத்தில் கொண்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, ஜல்லிக்கட்டு / வடமாடு / மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளை மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.