குமரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் சிறை கண்காணிப்பாளர் (பொ) சம்பத் தலைமையில் சிறை காவலர்கள் கைதிகள் அறையில் சோதனை செய்தனர். அப்போது கைதிகளுக்கான டிவி உள்ள அறையில் சோதனை நடத்திய போது செல்போன் ஒன்று இருந்தது. ஆனால் சிம்கார்டு இல்லை. சாதாரண செல்போன் ஆகும். இது தொடர்பாக கைதிகளிடம் விசாரணை நடந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்த முத்துராஜ் (25) என்பவர் அந்த செல்போனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. முத்துராஜ் கடந்த 5 12 2023 முதல் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி விசாரணை கைதியாக நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. நேசமணி நகர் போலீசார் நேற்று (5-ம் தேதி) வழக்கு பதிவு செய்து செல்போன் எப்படி கொண்டுவரப்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.