தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்: 8.82 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2025-01-07 16:28 GMT
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு அக். 29 முதல் நவ. 28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாது, வாக்காளர் இறுதிப் பட்டியலில் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்கள், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 143 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 505 வாக்காளர்கள், சென்னை துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 3,740 வெளிநாடுவாழ் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 லட்சத்து 78 ஆயிரத்து 7 பேர் மாற்றுத் திறனாளி வாக்காளர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது பெயர் சேர்த்தலுக்காக 14 லட்சத்து 2 ஆயிரத்து 132 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 13 லட்சத்து 80 ஆயிரத்து 163 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 4 லட்சத்து 10 ஆயிரத்து 69 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர் நீக்கலுக்காக 5 லட்சத்து 16 ஆயிரத்து 940 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 801 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இடப்பெயர்ச்சி காரணமாக 3 லட்சத்து 72 ஆயிரத்து 827 பேர், இறப்பு காரணமாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 131 பேர், இரட்டைப் பதிவு காரணமாக 15 ஆயிரத்து 797 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 244 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர் இறுதிப் பட்டியலை https://elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என அவர் கூறினார்.

Similar News