புகையான் நோய் தாக்குதலை தடுக்க வேளாண்துறை வழிமுறை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
சிவகங்கை வட்டாரத்தில், தற்போது கடுமையான பனிபொழிவு உள்ளது. நேரடி விதைப்பு செய்து இரண்டு முதல் மூன்று வாரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் காணப்படுகிறது. பழுப்பு நிறப் பூச்சிகள் துார்களின் அடிப்பாகத்தில் அமர்ந்து சாறை உறிஞ்சும். பயிர்கள் தீய்ந்து மஞ்சள் அல்லது பழுப்பு நிற வட்டமான திட்டுகளாக காணப்படும். பால் பிடிக்கும் முன்னரே பயிர் சாய்நது விடுவதால் நெல் பதராக மாறிவிடும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படும். புகையான் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிகப்படியான தழைச்சத்து உரப்பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் முன் வயலில் உள்ள நீரை வடிய செய்ய வேண்டும். பின் நெற்பயிர்களின் அடிப்பகுதியில் படுமாறு பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும். பைரித்ராய்டு, மிதைல் பராத்தியான், பென்தியான் மற்றும் குயினால்பாஸ் போன்ற புத்துயிர்ப்பு தரும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துத்துவதை தவிர்த்து ஒரு ஏக்கருக்கு டிநோடெயுரான் (Dinotefuran) 34.8 கிராம் அல்லது எதில்ப்ரோல் 10.7 % 40% பைமெட்ரோசைன் (Ethiprole 10.7% + Pymetrozine 40%) ஏக்கருக்கு 170கிராம் என்றளவில் தெளிக்குமாறும், மேலும் விபரத்திற்கு சிவகங்கை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம் என சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி தெரிவித்துள்ளார்.