ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

Update: 2025-01-07 01:56 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி அருகே காஞ்சிரங்கால், வாணியங்குடி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. காஞ்சிரங்கால் ஊராட்சியில் காஞ்சிரங்கால், அரசனேரி கீழமேடு, எம்ஜிஆர் நகர், அசிசி நகர், அரசினிப்பட்டி, இலந்தக்குடிப்பட்டி, காமராஜர் நகர், சஞ்சய் நகர், டி.புதூர், தென்னலிவயல் ஆகிய பகுதிகளையும், வாணியங்குடி ஊராட்சியில் வாணியங்குடி. கீழவாணியங்குடி, மேல வாணியங்குடி, இந்திரா நகர், அண்ணாமலை நகர், கூத்தாண்டன், ஆயுதப்படை குடியிருப்பு. குறிஞ்சி நகர், அண்ணா நகர், சீனிவாச நகர், சமத்துவபுரம், பழமலை நகர், பையூர், காட்டு குடியிருப்பு ஆகிய பகுதிகளையும் சிவகங்கை நகராட்சியுடன் இணைக்க அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு ஊராட்சிகளையும் சேர்ந்த மக்கள் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டு எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். சொத்து வரி, குடிநீர் வரி பல மடங்கு உயரும். இதனால் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் திடம் மனு கொடுத்தனர்.

Similar News