கோவை: குட்டிகளுடன் பப்பாளி விருந்து - ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் !

தடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த யானை பப்பாளி மரத்தில் இருந்த பழங்களை உண்டு அட்டகாசம்.

Update: 2025-01-07 04:53 GMT
கடந்த சில மாதங்களாக கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்ந்துள்ளது. வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று இரவு கோவை தடாகம் அருகே உள்ள சோமயம்பாளையம் பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரு குடியிருப்பு பகுதியில் வீட்டுக்குள் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், வீட்டு முன் வளர்க்கப்பட்ட பப்பாளி மரத்தில் உள்ள பழங்களை குட்டிகளுடன் சேர்ந்து சுவைத்துள்ளன. இந்த அரிய காட்சியை வீட்டின் உரிமையாளர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம், யானைகள் வாழ்விடத்தை இழந்து ஊருக்குள் புகுந்து வருவதையும், மனித-விலங்கு மோதல் அதிகரித்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று அச்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள்,யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News