சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

வேளாண்மை

Update: 2025-01-08 05:23 GMT
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின் படி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் கெங்காதரபுரம், ரெட்டவயல், கொள்ளுக்காடு, நாடியம், மணக்காடு, சோலைக்காடு ஆகிய கிராமங்களில் நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இதில், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி.சாந்தி தலைமை வகித்துப்                பேசுகையில், "பயறு வகை பயிர்களில் அதிக லாபம் தரக்கூடிய பயிர் உளுந்து பயிராகும். இந்தியாவில் பயிறு வகை பயிர்கள்  உற்பத்தியில் 10 சதவீதமும் சாகுபடி பரப்பில் 13 சதவீதமும் உளுந்து பங்கு வகிக்கிறது. சம்பா தாளடி நெல் அறுவடைக்கு  5-6  நாட்களுக்கு முன் மண் ஈரம் மெழுகு பருவத்தில் இருக்கும் போது விதைக்க வேண்டும். உளுந்து விதைப்பின் போது உயிர் உரங்களான ரைசோபியம் , பாஸ்போபாக்டீரியா மற்றும் உயிர் பூஞ்சாணக்கொல்லி டி- விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது  மகசூலில்  அதிக லாபம் பெறலாம்" என்றார்.  துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் பேசுகையில், "ஏக்கருக்கு 4 கிலோ  டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூப்பூக்கும் பருவத்தில் காலை அல்லது மாலை நேரத்தில் பயிர்களில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும் . இதேபோன்று 15  நாட்கள் கழித்து காய் பிடிக்கும்  பருவத்தில்  தெளிக்கவேண்டும் என்றார்.  பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள்,              உதவி தோட்டக்கலை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News