மழையால் பதராகி போன நெற்பயிர்களுடன் இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஊர்வலம்
விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் விவசாயிகள், தொடர்மழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில், பதராகி போன நெற்பயர்களை கையில் ஏந்தியப்படி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி, பூதலூர் நால்ரோட்டில் இருந்து கோரிக்கை முழக்கத்துடன் பேரணியாக, சென்று தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, தாசில்தார் மரிய ஜோசப்பிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை விவசாயிகள் அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம், சித்திரக்குடி, வைரப்பெருமாள்பட்டி, கல்விராயன்பேட்டை, ராயந்துார், சித்தாவயல், குணமங்கலம், மருதக்குடி, அய்யாசாமிபட்டி, திருவேங்கட உடையான்பட்டி, மாதுராயன் புதுக்கோட்டை, பழைய கல்விராயன் பேட்டை, ஆலக்குடி, குருவாடிப்பட்டி, திருமலை சமுத்திரம், முனையம்பட்டி பகுதியில், சுமார் நான்காயிரம் ஏக்கரில், கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பதராகி மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். பூதலுார் பகுதியில் சில இடங்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கீடு செய்யவில்லை. எனவே, அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தனர்.