குமரி மாவட்டம் குளச்சல் அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (51). இரும்பிலியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கரையகுளம் என்ற பகுதியில் செல்லும் போது பைக் எதிர்பாராமல் திடீரென நிலை தடுமாறி குளத்தின் கரையில் சரிந்து விழுந்தது. இதில் ஏசுராஜ் தவறி குளத்தில் விழுந்தார். இரவு வேளை என்பதால் யாரும் அவரை கவனிக்கவில்லை. இதனால் அவர் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். சிறிது கழிந்து அந்த வழியாக சென்ற ஒருவர் குளத்தின் கரையில் கிடந்த பைக் இன்ஜின் ஓடிக்கொண்டிருந்ததை கண்டு குளச்சல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி கிடந்த ஏசுராஜ் உடலை மீட்டு, குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.