குடியரசு தின விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழா வருகின்ற ஜனவரி 26ஆம் நாள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விழா தொடர்பான பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும்.;
பெரம்பலூர் மாவட்டம் குடியரசு தின விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 26.01.2025 அன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று (10.01.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழா வருகின்ற ஜனவரி 26ஆம் நாள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விழா தொடர்பான பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். விழாவின்போது, காவல் துறையினர் மூலம் காவல்துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்திட காவல்துறையினர் தகுந்த ஏற்பாடு செய்திட வேண்டும். விழா நடைபெறும் மேடை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் அவர்களின் வாரிசுதாரர்கள் அமரும் இடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றிற்கு முறையான இடங்களில் நிழற்பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைவருக்கும் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்திட வேண்டும். நிகழ்விடத்தில் மருத்துவக்குழுவினர், தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் காவலர்கள் பணியமர்த்த வேண்டும். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பள்ளிக் கல்வித் துறையினர் ஒருங்கிணைந்து நடத்திட வேண்டும். காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். குடியரசு தின விழா சிறப்பாக அமைந்திட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புஅலுவலர் ச.சுந்தரராமன், உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை முதன்மை அலுவலர்கள், காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.