கல்லூரி நீதிமன்றங்களில் சமத்துவ பொங்கல்

அரியலூரில் அரசு கலைக் கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2025-01-10 15:37 GMT
அரியலூர், ஜன. 10- அரியலூரிலுள்ள அரசு கலை கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரியலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அனைத்து துறைகளில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவை அக்கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்து, பொங்கல் விழாவின் சிறப்புகளை எடுத்துரைத்தார். பின்னர் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் சேர்ந்து பொங்கல் வைத்து, அதனை படையலிட்டு இயற்கையை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நீதிமன்றம்... அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி.மலர்வாலண்டினா தலைமையில், மாவட்ட நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பாரம்பரிய உடை அணிந்து, தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மண் பானையில் பொங்கலிட்டு, அதனை பசு கன்றுகள், காளை மாடுகளுக்கு கொடுத்த மகிழ்ந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது. பின்னர், விழாவில் பாரம்பரிய விளையாட்டுகளான உறியடித்தல், கயிறு இழத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், தாரை, தப்பட்டை முழங்க, கரும்பு மற்றும் வாழை தோரணங்கள் கொண்டு அந்தப் பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதே போல் ராஜாஜி நகரிலுள்ள மின்வாரிய அலுவலகத்திலும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Similar News