பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் கரும்பு, மஞ்சள் குலை விற்பனை தீவிரம்
பொதுமக்கள் உற்சாகம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில்,சேலம் மாநகரில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்ட பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அஸ்தம்பட்டி உழவர் சந்தை, செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, சூரமங்கலம் மற்றும் தாதகாப்பட்டி உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மதியம் முதலே கரும்பு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதேபோல், எடப்பாடி, பூலாம்பட்டி, இளம்பிள்ளை, ஓமலூர், காடையாம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலர் மஞ்சள் கொத்துக்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். பட்டைக்கோவில் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஞ்சுள் குலையை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலம் பழைய பஸ் நிலையம், பட்டைக்கோவில், பால் மார்க்கெட், கடைவீதி, அஸ்தம்பட்டி, ஆனந்தாபாலம் இறக்கம், அம்மாப்பேட்டை ஆகிய உழவர் சந்தைகள் முன்பு மஞ்சள் குலை, காப்புகட்டு பூக்கள் மற்று் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.