சந்திப்பு சாலைக்கு தரைப்பாலம் விரிவுபடுத்தும் பணி துவக்கம்
பரந்தூர் கிராமத்தில் சாலை விரிவாக்க பணிக்காக தரைபாலம் விரிவுபடுத்தும் பணி துவக்கம்
காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் கிராமத்தில் இருந்து, பொன்னேரிக்கரை வரை, 8.2 கி.மீ., துார ஒரு வழிச்சாலை இருந்தது. காட்டுப்பட்டூர், சிறுவள்ளூர் காலனி, சிறுவாக்கம் ஆகிய பிரதான வளைவுகளில், சாலை குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், 5 கோடி ரூபாய் செலவில், பரந்துார் - பொன்னேரிக்கரை சாலையை, கடந்த 2022ம் ஆண்டு விரிவுபடுத்தும் பணியை துவக்கினர். அதன்படி, 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 1.5 மீட்டர் கூடுதலாக 7 மீட்டருக்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், பரந்துார் பிரதான சந்திப்பில் தரைப்பாலம் விரிவுபடுத்தப்படாமல் இருந்தது. இதனால், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதை தவிர்க்க, மதுமரங்கலம் - பரந்துார் - காஞ்சிபுரம் மற்றும் பள்ளூர் - சோகண்டி சாலையை இணைக்கும், பரந்துாரின் பிரதான சந்திப்பு சாலையில், விரிவுபடுத்தும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிக்கு, பரந்துார் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய சந்திப்பு சாலையில், 65 லட்சம் ரூபாய் செலவில் தரைப்பாலம் விரிவுபடுத்தும் பணி துவக்கப்பட்டு உள்ளது. இந்த தரைப்பாலம் விரிவாக்கத்திற்கு பின், சந்திப்பு சாலை விரிவுபடுத்தப்படும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.