காணை அருகே வயலில் வேலை செய்த பெண் நகைக்காக கொலை
வயலில் வேலை செய்த பெண் நகைக்காக கொலை;
விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த ஆயந்துார் கூடலுார் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சாந்தி, 55; மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்ட நிலையில், கட்டட தொழில் செய்யும் தனது மகன் திருநாவுக்கரசுடன், 30; வசித்து வந்தார்.தனக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ள நிலையில் விவசாயம் செய்தும், மாடுகளை வளர்த்தும் வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் திருநாவுக்கரசு கட்டட வேலைக்கு சென்றுவிட்டார். சாந்தி உளுந்து அறுவடைக்காக வயலுக்கு சென்றார்.இரவு நேரமாகியும் சாந்தி வீடு திரும்பாததால், உறவினர்கள் வயல்வெளிக்கு சென்றுபார்த்தனர். அங்கு, உடலில் ரத்த காயங்களுடன், அரை நிர்வாரணத்தில் சாந்தி இறந்து கிடந்தார். அவரது காதில் அணிந்திருந்த 4 கிராம் கம்மல் பறிக்கப்பட்டு ரத்தம் கசிந்த நிலையிலும், முகம் மற்றும் உடல் பாகங்களில் ரத்த காயங்களுடன் இறந்ததால், அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, தெரிந்தது.இதுகுறித்த போலீசார் முதற்கட்ட விசாரணையில், சாந்தி தனது வயலில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரை கொலை செய்து, காதில் அணிந்திருந்த கம்மலை பறித்துள்ளனர். மேலும், பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.இது குறித்து, அவரது மகன் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.