பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூரில் உள்ள சந்தைகளில் திங்கள்கிழமை முழுவீச்சில் விற்பனை நடைபெற்றது. பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூர் காமராஜர் சந்தை, கீழவாசல் சந்தை, திலகர் திடல் சந்தை, உழவர் சந்தை ஆகியவற்றில் வழக்கத்தை விட திங்கள்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிக்கைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழைத்தார்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதேபோல, வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. மேலும், கரந்தை, சிவகங்கை பூங்கா, மருத்துவக்கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, விளார் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்துகள் குவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. பத்து கரும்புகள் கொண்ட கட்டு ஏறத்தாழ ரூ. 250 முதல் ரூ. 400 வரையிலும், சில்லரையாக ஒரு கரும்பு ரூ.30 - ரூ.50 வீதமும், ஒரு ஜோடி மஞ்சள் கொத்து அளவுக்கு ஏற்றவாறு ரூ. 20 முதல் ரூ. 50 வரைக்கும், மொச்சைக்கொட்டை, பச்சைப்பட்டாணி கிலோ ரூ. 100க்கும், பூசணிக்காய் கிலோ ரூ. 30க்கும் விற்பனையானது. வாழைத்தார் ரூ.350 முதல் ரூ.850 வரை விற்பனையாது. தொடர் மழையால் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டதால், வரத்து குறைந்து விலை உயர்ந்துவிட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல, கீழ வாசல் பகுதியில் மண் பானை ரூ. 100 முதல் ரூ.500 வரையிலும், மண் அடுப்பு ஏறத்தாழ ரூ. 150 முதல் ரூ.200 வரையிலும் விற்கப்பட்டது. பூக்கள் விலையும் அதிகரிப்பு: இதேபோல, தஞ்சாவூர் பூச்சந்தையில் கிலோ மல்லிகைப்பூ ரூ. 2 ஆயிரத்து 500 க்கும், முல்லைப்பூ ரூ. 1,400க்கும், ஜாதிப்பூ, கனகாம்பரம் தலா ரூ.1,500க்கும், அரளிப் பூ ரூ. 600க்கும், செவ்வந்தி ரூ.180க்கும், சம்பங்கி ரூ.300க்கும் விற்பனையானது.