விருத்தாசலம் அருகே அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை
கருகிய நிலையில் பிரேதம் கிடந்ததால் பரபரப்பு;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எம் வீரட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்காமன் (42). அதிமுக கிளை பொருளாளராக உள்ளார். கட்டிட தொழில் செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் காலையில் மர்ம முறையில் அப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கதிர்காமன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். விறகுகளைப் போட்டு எரிக்கப்பட்டதால் அவரது உடல் கருகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எரிந்து சடலமாக கிடந்த தனது கணவரின் பிரேதத்தை பார்த்து அவரது மனைவி ஜெயக்கொடி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் ஊமங்கலம் போலீசார் விரைந்து சென்று எரிந்து கிடந்த கதிர்காமன் பிரேதத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச் சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கதிர்காமனை எரித்துக் கொன்றது யார் என விசாரணை நடத்தினர். அப்போது நேற்று இரவு கதிர்காமன் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பிரபாகரன் (35), ராமச்சந்திரன் மகன் பாலகிருஷ்ணன் ( 43), ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். பாலகிருஷ்ணன் இந்திய ராணுவத்தில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும் கதிர்காமனுக்கும் இடையே மது குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் தாக்கி கொண்டதாகவும், அப்போது இதனை பார்த்த பிரபாகரன் உடன் கதிர்காமன் வீட்டிற்கு சென்று கதிர்காமன் பாலகிருஷ்ணன் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மது போதையில் சண்டையிட்டுக் கொண்டதால் இதனை கதிர்காமன் குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் காலை வரை கதிர்காமன் வீட்டிற்கு வராததால் கதிர்காமனின் மனைவி ஜெயக்கொடி பிரபாகரனிடம் சென்று என் கணவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை, என்ன நடந்தது என கேட்டுள்ளார். அப்போது பிரபாகரன் கதிர்காமனின் மனைவியை நேற்று இரவு மது குடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தேடிய போது, அப்பகுதியில் கதிர்காமனின் உடல் முழுவதும் எரிந்து கருகி கிடந்தது. இதில் அவரது முகம் மட்டும் தெளிவாக தெரிந்ததால் அவர் கதிர்காமன் என தெரிய வந்ததாகவும் பிரபாகரனை பிடித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன் தலைமுறைவான ராணுவ வீரரான பாலகிருஷ்ணனை தேடி வருவதுடன், இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.